Tuesday, May 28, 2019

பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்ட பலர்மீது கொலைவெறித் தாக்குதல்! - ஜப்பானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்



ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் தெற்குப் பகுதியில் உள்ளது கவாசகி (Kawasaki) என்ற நகரம். மிகவும் பிஸியாக இயங்கிக்கொண்டிருக்கும் ஜப்பான் நகரங்களில் இதுவும் ஒன்று. இன்று காலை (இந்திய நேரப்படி ) அனைத்து மக்களும் தங்களின் அலுவலகங்கள், பள்ளிகள் என விறு விறுப்பாகச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, நோபாரிட்டோ (Noborito) என்ற பூங்காவுக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பலர் நின்றுள்ளனர்.

அந்த நேரத்தில் கூட்டத்தில் புகுந்த ஒருவர், அங்கிருந்தவர்களை சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளார். இந்தக் கொலைவெறித் தாக்குதலில், ஒரு சிறுமி உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடனே, அந்தப் பகுதியில் அவசர  மருத்துவக் கூடாரங்கள் அமைக்கப்பட்டு, சிலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் இதுகுறித்துக் கூறும்போது, “நாங்கள் அனைவரும் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் நின்றுகொண்டிருந்தோம் . அப்போது ஒருவர், அங்கிருந்த அனைவரையும் கத்தியால் குத்தினார். அவரின் முகம் எனக்கு சரியாக நினைவில் இல்லை.  அப்போது பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மேலும், அதே பகுதியில் ஒருவர் கத்தியைக்கொண்டு தன்னைத் தானே குத்திக்கொள்வதையும் பார்த்தேன். பொதுமக்களை குத்தியவரும், தன்னைத் தானே குத்திக்கொண்டவரும் ஒருவர்தானா என எனக்கு சரியாகத் தெரியவில்லை” இவ்வாறு கூறியுள்ளார்.

மற்றொருவர், “பேருந்து நிறுத்தத்திற்கு எதிரில் நாங்கள் இருந்தோம். அப்போது பெரும் கூச்சல் கேட்டது. அடுத்த சில நிமிடங்களில் அந்த இடத்துக்கு ஆம்புலன்ஸ் பறந்துவந்தது. ஒரு ஆண், தரையில் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். இவை அனைத்தும் கண்மூடித் திறப்பதற்குள் நடந்துவிட்டன. இதைத் தொடர்ந்து, இந்தப் பேருந்து நிறுத்ததிற்கு அருகில் உள்ள பள்ளிப் பேருந்து நிறுத்தத்திலும் இதேபோன்ற சம்பவம் நடைபெற்றது. எங்கள் பகுதியில் இப்படி ஒரு தாக்குதலைக் கண்டதால் மிகவும் அச்சமாக உள்ளது” என்று பேசியுள்ளார். 


நான்கு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தன் அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுடன் என்றும் அமெரிக்க அரசு துணை நிற்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஜப்பானில் நடந்த தாக்குதல்களில், இது மிகவும் கொடூரமானது எனக் கூறப்பட்டுள்ளது.
தாக்குதல்குறித்துப் பேசியுள்ள டோக்கியோ காவல் துறை, “ சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறிய தகவலின்படி, தாக்குதல் நடத்தியவர் தன்னையும் குத்திக்கொண்டு இறந்துள்ளார் என நாங்கள் நினைக்கிறோம். ஆனால், அந்தப் பேருந்து நிறுத்தத்தில் இரண்டு கத்திகள் கிடந்தன. அதனால், யார் தாக்குதல் நடத்தியது என்ற முழுமையான விவரம் கிடைக்கவில்லை. தொடர்ந்து, தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது. தாக்குதலுக்கான நோக்கம் குறித்தும் விசாரணை நடத்திவருகிறோம்” என்று கூறியுள்ளனர். 




No comments:

Post a Comment