Friday, May 31, 2019

6 மணி நேரம் தொடர்ந்து வீடியோ கேம் விளையாடிய சிறுவன்..: திடீர் நெஞ்சு வலியால் உயிரிழந்த பரிதாபம்!




நீமூச்: மத்திய பிரதேசத்தில் மொபைல் போனில் தொடர்ந்து 6 மணி நேரம் பப்ஜி என்ற வீடியோ கேமை விளையாடிய சிறுவன் நெஞ்சு வலியால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள நீமூச் நகரத்தை சேர்ந்த ஹருன் ரஷீத் குரேஷி என்பவரின் மகன் ஃபுர்கான் குரேஷி. 12ம் வகுப்பு படிக்கும் 16 வயதான ஃபர்கானுக்கு மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடுவது அலாதி பிரியமாக இருந்துள்ளது. கடந்த புதன்கிழமையன்று தொடர்ந்து 6 மணி நேரம் வீடியோ கேம் ஆடிய சிறுவன், திடீரென நெஞ்சை பிடித்துக்கொண்டு மயங்கி விழுந்துள்ளான். ஃபர்கானை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவனது நாடித்துடிப்பு மிகவும் குறைவாக இருந்துள்ளது. இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவன் மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மகனின் இறப்பு குறித்து பேசிய தந்தை ஹருன் ரஷீத் குரேஷி, ஃபர்கான் தனது மதிய உணவை உண்ட பின்பு தொடர்ந்து வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், மயக்கமடைவதற்கு முன் சுமார் 7 மணியளவில் மிகவும் பதற்றத்துடனும், ஆத்திரத்திலும் இருந்த ஃபர்கான், மற்ற ஆட்டக்காரர்களிடம் மிகவும் கூச்சலிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், சிறுவனின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர்களிடம் மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடுவதால் ஏற்படும் தீமைகளை பெரியவர்கள் எடுத்துரைக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதுதொடர்பான விழிப்புணர்ச்சியை பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும் என்றும், அப்போது தான் சிறுவர்களிடம் தெளிவு கிடைக்கும் என்றும் சமூக ஆர்வலர்களும் எடுத்துரைக்கின்றனர்.
...

Source and Copyright by : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=499466

No comments:

Post a Comment